Thursday, December 10, 2009தொலைதூர தேசம், விடியல் எப்போது? 

(இந்த தலைப்பு எனக்கு பலபின்னூட்டங்களையும், பலர் வருகையையும் தரும்,சே..கேவலமானவன் நான்..)

போர், பல மாற்றங்களை கொண்டுவருகிறது. இன்னல்கள் மட்டுமல்ல சுபீட்சமான வாழ்வையும்தான். எப்படி? என்கிறீர்களா.
நீங்கள் இதை வாசிக்கும் ஒரு ஈழம் அகன்ற ஒருவராக‌ இருந்தால் உங்கள் வீடு கனடாவிலோ, இங்கிலாந்திலோ,சுவிஸ்சிலோ, ஆஸ்ரேலியாவிலோ இல்லை இன்ன பிற நாடுகளிலோ இருக்கும். ஒரு தனியறை அதில் சகல வசதிகளும் உள்ள ஒரு கணணியின் முன் அமர்ந்து இதை நீங்கள் வாசிக்கக்கூடும், ஏனென்றால் நான் அப்படி இருந்துதான் இதை எழுதுகிறேன். நாம் சுபீட்சமான வாழ்வுதான் வாழ்கிறோம். வேலையில் சம்பளம் குறைவு, ஒரேகுளிர், ஒரே சூடு,நேரமே இல்லை என்ற வாக்கியங்களோடு எம் வாழ்நாட்கள் கழியும் ஒரு சுபீட்சமான வாழ்வு. நம்மில் பலபேர்க்கு போரால் கிடைத்த வாழ்வு இது, இல்லையென்றால் கந்தையா அண்ணையோடு வயலிலும், அந்தோணின் தோணியில் இருந்து ஆகாயத்தையும், பனைமர நிழலில் பிலிப்பனின் கள்ளையும் குடித்துக்கொண்டு இருந்திருப்போம். எல்லாம் அவர்கள் தந்தது என்பது மட்டும் உறைக்காமலே இன்று இங்கு ஒரு வாழ்வு வாழ்கிறோம். அவர்கள் இறந்துபோனார்கள்,கடைசியில் ஒரு பருக்கை சோறில்லாமல், ஒரு குவளை நீரில்லாமல், ஒழுங்கான ஒரு உடையில்லாமல்,உதவி கிடைக்காது என்ற ஏக்கதிலும் உணர்விளந்து, உறுமிவரும் பேரிரைச்சல்களிடையே சிக்கி, சிதறுண்டு,சின்னபின்னப்பட்ட
ு சிதறிப்போனார்கள்.
இது முள்ளிவாய்காலில் நடந்ததில்லை அதற்க்கு முன்னமே நடந்தது. நாம் அதை மறந்துபோனோம். எம் நினைவில் நிற்பது இப்போது முள்ளிவாய்க்கால் மட்டுமே இனி எப்போதும்.

நாம் இதை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருப்போம், கடைசியாக நடந்தது மட்டுமே, ஏனெனில் எமக்கு மறதி அதிகம் கடந்த சோதனைகள்,துயரங்கள் எல்லாம் நினைவுக்கு வரா வாழ்வு வாழ்கிறோம்,அடுத்து வரும் (இ)ராவணன் பற்றிய எண்ணத்தோடும், இளையராஜாவா இல்லை ஏ.ஆர்.ரகுமானா என்ற விதர்பங்களோடும்,வெள்ளிக்கி
ழ்மை என்ன வாங்க்கிகுடிப்பது என்பதோடும் அவளா இல்லை இவளா என்பதோடும் எம் வாழ்க்கை நகர்கிறது. இடையே இந்த 18ம் திகதி 'கட்டாயம் போகோணுமோ மச்சான்' என்ற கேள்விகள் மட்டுமே, எல்லாரும் வருவினம், 'கேள்ர்ஸ் வருவினமடா' என்ற பதிலோடும் தயாராக இப்போதே ஆரம்பித்துவிட்டோம்.எங்கே போகிறே(றோ)(ம்)ன் நாம் இல்லையில்லை நான்?
தனித்துவிடப்பட்ட அவர்கள் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போதுமட்டுமே அலைமோதும்,

நண்பி மயூ சொன்னதுபோல
//எனக்குள்ளும் உணர்ச்சி இருக்கிறது என்று காட்ட இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அதற்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தது கார்த்திகை வரையாவது காத்திருக்க நேரிடும்//

அதன் அவசரமே தெரியும் இதில். வேறு வழி ஒன்றும் செய்யமுடியாத, செய்யத்தெரியாத ஒரு வாழ்வு வாழும் நான்(ம்?)இதையாவது செய்வோம்.

அத்தோடு முடிக்கும் எண்ணம் இருந்தாலும் பாழாய்போன மனச்சாட்சி விடுவதாயில்லை என்னையே இரவிரவாய் உலுக்கியெடுக்கிறது. அவர்கள் வலிகள் சொல்ல எனக்கு அருகதை கிடையாது. அவர்கள் போட்ட இந்த பிச்சை வாழ்க்கை என்னை எங்கெல்லாம் கொண்டுசெல்லும் என்பதும் தெரியாது. ஆனால் அவர்கள் இதற்காக எதையும் கேட்டுப்பெறவில்லை, எல்லாவற்றையும் விட்டுத்தந்தார்கள்,கை, கால், கற்பு, மானம் கடைசியில் உயிரையும். என் மனதில் நின்று வெற்றிபெற்றவர்கள் அவர்கள்தான். நீ இன்னும் வலி படு நாங்கள் போகிறோம் என்று பிறந்த மண்ணிலே இறந்துபோனார்கள். கணேச‌ண்ணை சொல்லிக்கொண்டு இருந்தார் நேத்து 'என்ர மண்ணில சாகிறத்துதாண்டா எனக்கு பெருமை' என்று கடைசி மிடர் விஸ்கி குடித்தபடி...

பின்குறிப்பு:இதற்க்குமேல் எழுதும் வலிமையையும், அருகதையையும் அவர்களிடம் கேட்டு பிரார்த்த‌னை செய்தேன், பதில் மட்டும் வரவேயில்லை.

...0 பின்னூட்டங்கள்: