Wednesday, July 28, 2010

இறகு...
ஏதோ ஒன்றைத்தேடி அலையும் மனசு
இருக்கும் இடத்தில் இருந்து எங்கெல்லாமோ போகிறது.
பறக்கும் மனதை ஏதோ ஒன்று கனமாய் கீழே இழுத்துவரப்பார்க்க‌
தன்னந்தனியே ஒற்றை இறகாய் உதிரும் நினைவு ஒன்று
மெல்ல பறந்து வந்து சாலையின் ஓரத்தில் விழுந்து
வேகமாய் சென்ற வாகனக்காற்றில் ஆடி மீண்டும் அடங்கியது.

அவள் அதை எடுத்துப்பார்த்தாள்,கையில் வைத்துக்கொண்டாள்.
சாய்ந்து நடந்து பாதையோர பானக்கடையின் சுவரருகின்
நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
மெல்ல சிறகின் மேலே தன் சிறுவிரலால் தடவினாள்.
பெருமூச்சுவிட்டுக்கொண்டாள், பின் அதை எடுத்து
தன்கைப்பைக்குள்ளே வைத்துக்கொண்டு எழுந்து நடந்தாள்.
நான் பார்க்க என் நினைவிறகு அவளுடன் போனது.
ஒருவேளை அவளும் தன் இறகைத்தொலைத்திருப்பாளா?

நான் மெல்ல நடந்து அவள் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
மனசு இலேசாக, அருகே அமர்ந்த வெண்புறாவை பார்த்தபடி
அவள் சென்ற திசை நோக்கினேன்,
இன்னொரு இறகு மேலே எழுந்து பறந்தது.

Monday, July 19, 2010

சில சிதறல்கள்...


அந்த‌ மாலையில் உன்னைக்காண காலையிலிருந்தே பரபரத்திருந்தேன் நான்.
நீ வந்த மாலையில் மழையாய் நீ வர செடியாய் நான். 

நனியாமல் நீ நின்ற அந்த பூவரமரம் விசிலடித்தது...

எங்கோ குழந்தை சிரித்தது.. பெண் வீதிதாண்டினாள்.. 
குறுக்கேபோன என்னை ரோட்டோரத்தவன் கை நீட்டினான், 
நான் சில்லறை போட சிரித்தாய் நீ பிச்சையானேன் நான்...


துளிகள் போட்ட கோலத்தில் நீ போட்ட கோலமழிய மழை வெறுத்தேன் நான் அன்று. 
அதே மழையில் மறுநாள் நீ ஆட மழை சிரித்த்து என்மேல், என்னுள்ளே தூறல் தொடங்கியது, 
நீ ஆட ஆரம்பித்தாய் கூடவே நானும்...


நீ கேட்ட இல்லாத ஒன்றிற்காய் ஏழு மைல் போனேன் நான்
இருக்கின்ற எனக்காய் எட்டு அடி வைத்து வரமாட்டாயா நீ?கண்மூடி தொலைகின்ற கணப்பொழுதில் உன்முகம் கண்ட என் கார் ஃப்ரேக் அடித்தது
 என் கால் விறைத்திருந்தது அப்போது...ஏதோ எழுத நினைத்து நான் தட்டிய எழுத்துருக்கள் எல்லாம்
உன் பெயர் காட்டின கணணித்திரையில்
 என் விரல்களுக்குள்ளுமா வந்துவிட்டாய் நீ உன் பெயர் பொறிக்க...

Monday, July 5, 2010

கருப்பாய் காத்திருந்து நெருப்பாய் போனவரே...


மாமழையிலும் மங்கிய ஒளியிலும்
மரங்களுக்கிடையிலும் மதகுக்கரையிலும்
கருப்பாய் காத்திருந்து நெருப்பாய் போனவரே
மெழுகுதிரியால் சுட்டுவிரல் சுட்டவலி பெரிதென்று பீற்றினோம்
நீர்மெழுகோடு மெழுகாய் கருகுகையில் நம்கை வெட்கினோம்
எம்நெஞ்சிலே நீரேற்றிய தீயை அணையவிடாது
காற்றோடு காற்றாய் கடலோடு அலையாய் இருந்து காப்பீராக.

தன்னுயிர்போகும் நாளாறிவர் நேரமறிவர் வகையறிவர்
தன்னிலைமறந்து தாய்மண்வேண்டி தற்கொடை ஈய்ந்த தவப்புதல்வர் தலைவனின் வழியில் தன்நடை பயின்று
தரணியில் தமிழர் தலைநிமிர்வரென்று தமக்குதகனமூட்டியோர்
தம‌க்குள்ளூட்டிய தீயை தமிழர்க்குமூட்டினர் இன்று
அவர்கண் கனவை நனவாக்க‌ மறவர் நாங்கள் ஒருமுறை
மரத்தோம் இனி மறுகண் எடுப்போம் இவர் மறக்கோம்.

நல்வரிகள் நாலு சொல்லி நாமறுக்க முடியவில்லை
நல்வினைகள் செய்ய எண்ணி மாண்டாரை மறக்குதில்லை
என் மனம் மறக்குதில்லை இன்று ஓர் தினம் நினைப்பதற்க்கு
அவர் செய்த காரியங்கள் நினைவிருக்கு இருந்தும் என்றும்
மறக்கவிலா மாமனிதர் அவர் வெளியில் கறுப்பு உடை
உள்ளே வெள்ளையுடை நீ இனி எதிரி கனவுடை.

Sunday, July 4, 2010

குளிர்ந்த கோப்பி..
என் மனம் சிறகடித்துப் பறந்தவேளையில்
நீ கோப்பி குடித்திருந்தாய் உன் முடியில் ஒரு கெட்டு
மட்டும் அழகாய் காற்றில் ஆடியதை ரசித்துக்கொண்டிருந்தேன்
நீ விலக்க மறந்த‌துன்பிம்பம் என் மனநிழலில் ஆடிக்கொண்டிருந்தது

நீ நிமிர்த்த பார்வை என்னைக் குளிர்த்தது
அவன் உன்னருகில் வந்து முத்தமிட்டபோது
என் கோப்பி குளிர்ந்திருந்த‌து அப்போது உன் பார்வை
இப்போது எனை சுட்டது எனினும் நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்

உன் நிழல் என்னுள் தொலைந்துபோயிருந்தது இப்போது நீ சிரித்தாய்
வெளியே மழை தூறத்தொடங்கிருந்தது
நான் உள்ளே தீ அணைப்பில் ஈடுபடத்தொடங்கினேன்.